வீசுதடா விஷக்காற்று...


உன்னால் நாம் உயிருடன் இருக்கிறோம்

உறங்குவதற்கும் ஊஞ்சலாகிப் போனது
உன் வருடல்களின் குளிர்காற்று
ஏன் இன்று வீசுகிறாய் விஷக்காற்றாய்
உனக்கு இன்னும் விடுமுறை இல்லையா


மழையும் உனக்கு மைத்துனனா
இல்லை உன் உடன்பிறப்பா
மலையையும் சாய்க்கிறாய்
மண்ணையும் கரைக்கிறாய்-எம்
மனதையும் வதைக்கிறாய்
மரணம் இன்றுதான் எமக்கோ



நேற்றுப் பட்டம்விட்ட பச்சிளம் கன்றுகள்
இன்று விழுந்து கிடக்கும்-பெரு
விருட்சத்தின் விழுதுகளை
இறுக்கப் பற்றிப் பிடித்து-கதறி
விம்மி விம்மி அழுகிறார்கள்
நீ செத்துப்போ என்று



காற்று ஓய்ந்து போனதோ என எண்ணி
என் கடைசி மகனுடன் கடற்கரை வந்தேன்
சீற்றம் கொண்டு சீறி வந்தாய்-என்
பாலகனும் இல்லை 
பட்டமும் இல்லை-பச்சிளம்
கன்றுகளும் என் கண்ணெதிரேயில்லை
பெரு விருட்சத்தின் விழுதுகளில்லை
விழுந்து கிடக்க வீடில்லை
விம்மியழ உறவுகளில்லை-என்
ஊருமில்லை-நீ
நாளையும் வருவாயா சொல்லிவிடு

0 comments:

கருத்துரையிடுக